பொகாட்டா, (கொலம்பியா)
கொலம்பியாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 254 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு கொலம்பியாவில் உள்ளது புடுமாயோ மாகாணம்.
இங்குள்ள மொகாவா என்ற பகுதியில் கடந்த சில நாட்களாகக் கடும் மழை பெய்தது. இதில் அங்குள்ள அனைத்து ஆறு மற்றும் குளங்கள் நிரம்பின. மழையின் அளவு மேலும் அதிகரித்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரைகள் உடைந்தன.
இதைத்தொடர்ந்து, நேற்று நள்ளிரவு மலைப்பகுதிகளில் இருந்து வேகமாக வந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதில் அந்தப் பகுதியில் வசித்து வந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். நிலச்சரிவும் ஏற்பட்டதால் அதில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
பாலங்கள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியை சேர்ந்த பலரை காணவில்லை எனவும் சொல்லப்படுகிறது. அதனால் பலியானவர்களின் எணிணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.