இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பரசினார் நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளின்  தற்கொலை படைதாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பகுதி பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ளது.

அந்த பகுதியில் உள்ள மசூதியில் ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண்களின் நுழைவு வாயிலுக்கு காரில் வந்த ஒருவர் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார்.

இதில் கார்  வெடித்து சிதறியது. இந்த கோர  சம்பவத்தில் 30பேர் பலியானார்கள். 90க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியானவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம். பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவ  ராணுவம் ஹெலிகாப்டரை அனுப்பியுள்ளது.

மேலும், அவர்களுக்கு தேவையான  ரத்தத்தை  தானம் செய்ய முன்வருமாறு பொதுமக்களுக்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த மாதம் தெற்கு பாகிஸ்தானில் உள்ள சூஃபி மசூதி ஒன்றில் நடந்த தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அந்தத் தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.