சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேரை  வேறு மாநில உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றம்  செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் நீதிபதி M.M.ஸ்ரீவஸ்தவாவை நியமிக்க பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 75 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இப்போது 58 பேர் மட்டுமே சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த 5 நீதிபதிகள், இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெற்றுள்ளனர். இதன் காரணமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் காலிப்பணிடங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி   கே.ஆர்.ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் வேறு மாநிலங்களுக்கு மாற்றவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி,    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விவேக் குமார் சிங், பட்டூ தேவனாந்த் ஆகிய இருவரையும் வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை அளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாகப் பணியாற்றி வரும் விவேக் குமார் சிங் மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான பட்டூ தேவனாந்த், ஆந்திரா மாநில உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்துக்கு  கர்நாடகா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஹேம்ந்த் சந்தன் கவுடர், தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான பரிந்துரையை ஏற்கனவே உச்ச நீதிமன்ற கொலிஜியம் அளித்திருந்தது. அதற்கு  குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து விட்டார். எனவே,  அவர்கள் விரைவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து இரண்டு நீதிபதிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.  இந்தியா முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் 21 நீதிபதிகளை வேறு மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம்  நாடு முழுவதும் 21 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் நீதிபதி M.M.ஸ்ரீவஸ்தவாவை நியமிக்க பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சுஜோய் பால், கல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வி. காமேஸ்வர் ராவ், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கும் மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. மே 26, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தின் போது இறுதி செய்யப்பட்ட இந்தப் பரிந்துரைகள், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதையும், உயர் நீதிமன்றத் தலைவர்களிடையே நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

தற்போது இரு நீதிபதிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட உள்ளதை அடுத்து,   சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை  17 ஆக அதிகரித்துள்ளது.