கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.

கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 28ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, கலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டய படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8ம் தேதி முதல் துவங்கவும், மாணவர்களுக்காக விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந் நிலையில் வரும் 8ம் தேதி முதல் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் என்று அதன் முதல்வர் கல்யாண சுந்தரம் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழக அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை வரும் 8ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதல் படி, வரும் 15ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளன. மாணவர்களுக்கான விடுதிகளும் வரும் 8ம் தேதி முதல் தொடங்கும்  என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.