சென்னை: கோயில் நிதியில் கல்லூரி தொடங்குவதில் சதி நடப்பதாகவும், அரசு, அரசு பணத்தில்தான் கல்லூரி தொடங்க வேண்டும் என்று  திமுக அரசை  எடப்பாடி பழனிசாமி  விமர்சித்த விவகாரம், சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி கடந்த ஏப்ரல் மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கடந்த 7ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் சுற்றுப் பயணம் தொடங்கி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அவரது  வடவள்ளியில்  பிரசாரத்தின்போது, , “கோயிலைக் கண்டாலே திமுக அரசுக்கு கண்ணை உறுத்துகிறோம். கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? மக்கள் இதனை சதிச் செயலாகவே பார்க்கிறார்கள். ஏன் அரசுப் பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியதுதானே?” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதை திமுக உள்பட திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.  மேலும், அமைச்சர்  சேகர்பாபு அதிமுக எம்எல்ஏக்களே கோவில் நிதியில் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், திருவாரூரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “அதிமுகவை மீட்க முடியாத எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை மீட்கப் போகிறாராம். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். அறநிலையத் துறை சார்பில் பள்ளி, கல்லூரிகள் கட்டக்கூடாது என்று பேசுகிறார். முன்பு பாஜகவுக்கு வெறும் டப்பிங் பேசிக்கொண்டு இருந்த எடப்பாடி பழனிசாமி, இப்போது பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸாகவே மாறிவிட்டார். அறநிலையத் துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்கவும் சட்டம் இருப்பது தெரியாமல் அவர் எப்படிதான் முதல்வராக இருந்தார் என்பது புரியவில்லை. பக்தவச்சலம் தொடங்கி எம்ஜிஆர் கூட பழனி ஆண்டவர் கல்லூரியை திறந்து வைத்துள்ளார். அந்த கல்லூரிக்கு கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்ததே எடப்பாடி பழனிசாமிதான். இப்போது திமுக அரசு கல்லூரி தொடங்கினால் தவறா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில விழுப்புரத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி இதற்கு பதில் அளித்துள்ளார்.  “இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கருத்தைச் சொன்னேன். ஒரே நேரத்தில் 9 கல்லூரிகள் அமைக்க அறிவிப்பு வெளியிட்டதற்கு வரவேற்பு தெரிவித்தோம்.  அறநிலையத் துறையில் இருந்து நிதியை எடுத்து அந்த கல்லூரிகள் அமைக்கப்படும் என்று சொன்னார்கள்.

அதற்கு நான் சொன்னேன், கல்லூரி அமைப்பது அவசியம்தான். அறநிலையத் துறை நிதி எடுத்து கல்லூரிகள் அமைத்தால் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் முழுவதுமாக கிடைக்காது.  அறநிலையத் துறை நிதியில் இருந்து மட்டும்தான் அதற்கு செலவிட முடியும்.  ஆகவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக கொண்டு வர வேண்டும் என்று நான் சொன்னதற்கு கண், காது, மூக்கு வைத்து இரண்டு நாட்களாக விவாதம் நடக்கிறது.

ஸ்டாலின் அவர்களே அதிமுக ஆட்சி இருந்தபோது 67 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தோம். திமுக ஆட்சிக் காலத்தில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரியை கொண்டு வர முடிந்ததா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.