சென்னை:
நடப்பாண்டில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மாதம் மற்றும் இந்த மாதம் நடைபெற வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்வுகள் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஊரடங்கு மே மாதம் 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், தேர்வு நடைபெறுவது குறித்து சரியான அறிவிப்புகள் வெளியிடப்படாமல் உள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தேர்வு நடத்தப்படாத கல்லூரித் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தின்போது நடத்தப்படும் என்றார்.
கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் தேர்வுகள் நடக்கும் என்றும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான நடப்பு கல்வி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளும் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியவுடன் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.