அலபாமா: கல்லூரி படிப்பு(பட்டப்படிப்பு) முடித்தவர்களின் வாழ்நாள் அதிகரிக்கிறது என்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கல்வி மட்டுமே மனிதருக்கு அழியாத செல்வம். நல்ல வாழ்க்கை, நற்பெயருடன் ஆயுளையும் கூட்டுகிறது இந்தக் கல்வி என்று அமெரிக்காவின் அலபாமா மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது; கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் நான்கு நகரங்களில் 5114 நபர்கள் பற்றிய தகவல் சேரிக்கப்பட்டது. கல்வி உட்பட பல செயல்பாடுகளும் கண்காணிப்பட்டன. இவர்களில் 395 நபர்கள் 50 வயதின் மத்தியில் மரணமடைந்துள்ளனர். இதில் 13% பேர் கல்லூரிப் படிப்பை படிக்காதவர்கள். கல்லுாரியில் படித்த 5% பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
ஆய்வின்படி, இளநிலை, முதுநிலை என கல்வியின் அடுத்தடுத்த நிலையை எட்டும் நபர்களின் ஆயுட்காலம் தலா 1.37 ஆண்டுகள் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. பந்தயத்தில் ஈடுபடுவது, அதிக வருமானம் பெறுவது உள்ளிட்ட மற்ற எந்த காரணத்தாலும் ஆயுட்காலம் அதிகரிக்கவில்லை.
இளம் வயதினருக்கு கல்வியை எந்தளவுக்கு தருகிறமோ, அதன் அடிப்படையில் ஆயுட்காலத்தில் மாற்றம் ஏற்படுகிறது என்பது இதன்மூலம் தெரியவருகிறது என்று அந்தப் பல்கலை தரப்பில் கூறப்பட்டுள்ளது.