டெல்லி: வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவை கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடும் குளிரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடும் குளிரால் திடீரென ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலும், ரத்தம் உறைவதாலும் மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்படுவது தாமதம் ஆவதாக கூறப்பட்டுள்ளது. நேற்று 7 டிகிரி செல்சியசாக இருந்த வெப்பநிலை இன்று அதிகாலை 5 டிகிரி செல்சியசாக இருந்தது.
இந்த ஆண்டு டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. டெல்லி அயா நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.8 டிகிரி செல்சியஸாகவும், சப்தர்ஜங் பகுதியில் 4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது வழக்கத்தை விட குளிர் அதிகமாக உள்ளதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடமாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ய டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. ராஜஸ்தானின் சுரு பகுதியில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் தில்லியின் அயநகர் பகுதியில் 1.8 டிகிரி செல்சியஸும், பஞ்சாபின் அமிர்தசரஸில் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது என்றும் “உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், சண்டிகர் மற்றும் டெல்லியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடும் குளிர் நிலவும். அடுத்த 2 நாட்களுக்கு இந்தப் பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் தொடரும்” என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உத்தர பிரதே மாநிலம் கான்பூரில் அதிகரித்துள்ள கடும் குளிர் காரணமாக, வயதான பலர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு, 25 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில், 17 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கும் முன்பே இறந்துவிட்டனர்.
இதுதொடர்பாக கான்பூரில் உள்ள இதய சிகிச்சை நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறை வெளியிட்ட தகவலில், வியாழக்கிழமை 723 இதய நோயாளிகள் அவசர சிகிச்சை மற்றும் புறநோயாளிகள் பிரிவுக்கு வந்துள்ளனர். இவர்களில் 41 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில், 7 பேர் உயிரிழந்தனர். இதுதவிர, 15 பேர் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலை. பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “இந்தக் குளிர் காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்று கருதக்கூடாது. மாரடைப்புக்கு உள்ளான சிறுவர்களும் எங்களிடம் வந்துள்ளனர். வயது வித்தியாசமின்றி அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும்” என்றார்.
கடும் குளிரால் திடீரென ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலும், ரத்தம் உறைவதாலும் மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர்.