கோவை,

த்திய அரசின், குறிப்பாக மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று, நாடு முழுவதும் ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது . இந்த திட்டத்திற்காக கோவை ஸ்மார்ட் சிட்டியின்  தலைமை நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்ட கோவை மாவட்ட முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராஜுவின் மகள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டிக்காக   நாடு முழுவதும் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான கட்டமைப்பு பணிகளை செய்வதில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது. இந்த  ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் உலகத்தரத்திற்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த திட்டத்தில் தமிழகத்தில் கோவை மாவட்டமும் இடம்பெற்றுள்ளது.  ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள ஸ்மார்ட்சிட்டி லிமிடெட் என்ற நிறுவனம் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் முதன்மை செயல் அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டது. இதில், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான தலைமை செயல் அலுவலராக சுகன்யா நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நேர்காணலில் கலந்து கொண்ட 17 பேரில் சுகன்யா மட்டுமே தகுதி உள்ளவராக இருந்ததாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இவர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், அதிமுக பிரமுகருமான கே.பி.ராஜுவின் மகள் என்பது தெரிய வந்தது. அதிமுக அரசின் பரிந்துரை காரணமாகவே தகுதியில்லாத நபரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இதை எதிர்த்து அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.

இந்த திட்டத்திற்கு திறமை, அனுபவம், தொழில்நுட்ப அறிவு கொண்ட ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்றும்,  தற்போதைய  நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.

கடும் எதிர்ப்பை தொடர்ந்து,  சுகன்யா மனஉளைச்சலுக்கு ஆளானார். அதையடுத்து,  அந்த பதவியில் இருந்து  ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து அவர் மாநகராட்சி கமிஷனரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். அதில், தகுதி இருந்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டப்படு வதாக கூறிய அவர் தேவையில்லாத விமர்சனங்களால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனவே இப்பணியில் மேற்கொண்டு தொடர விரும்பவில்லை என ராஜினாமா கடிதத்தில் கூறி உள்ளார்.

அவரது ராஜினாமாவை கோவை மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன் ஏற்றுக்கொண் டார்.  புதிய சி.இ.ஓ. நியமனம் செய்யும் வரை மாநகராட்சி ஆணையரே பொறுப்பு அதிகாரியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.