கோவை:

கொரோனா வைரஸ் தடுப்பில் பெரும் பங்காகற்றி வரும் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் கோவை சிறைச்சாலை கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அசத்தலான பணி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் முகமூடி அணிய வேண்டும் என்றும், சானிடைசர் கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால், பொதுமக்களுக்கு தேவையான முகக்கவசங்களும், சானிடைசர்களும் கிடைப்பதில்லை. இந்த நிலையில், கோவை சிறைக்கைதிகள் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நிலவி வரும் முகக்கவசம்  தட்டுப்பாட்டைப் போக்க முக கவசம் தயாரிக்கும் பணியில் கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து கூறிய சிறைத்துறை அதிகாரி ஒருவர், முகக்கவசம் தயாரிக்கும் பணிக்காக தனியார் நிறுவனம் மூலம்  20-க்கும் மேற்பட்ட கைதிகளுக்குத் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.  தற்போது அவர்களைக் கொண்டு முக கவசம் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 2,000 முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இவைகள்  சிறை பஜார் மூலம்  விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கோவை காந்திபுரத்தில்  சிறை பஜார் என்ற கடை உள்ளது.   இங்கு சிறை கைதிகள் மூலம் தயாரிக்கப்படும்  உணவு, துணிப்பை, பேக்கரி பொருட்கள், சோப் ஆயில், பினாயில், காக்கி சீருடை துணி, செக்கு எண்ணை போன்றறை விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.