கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனையின் உரிமம் ரத்து- சுகாதாரத்துறை அதிரடி

Must read

கோவை:
கோவையில் கொரொனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்த சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனை கொரொனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் உரிமத்தை சுகாதார துறை ரத்து செய்தனர். விசாரணை முடியும் வரை யாரையும் சிகிச்சைக்கு அனுமதிக்க கூடாது எனவும் அதிகாரிகள் உத்திரவிட்டுள்ளனர்.

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஷாஜகான் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையில் இருந்த ஷாஜகான் மே 20-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் நதீமிடம் மருத்துவமனை நிர்வாகம் ரூ.16 லட்சம் கட்டணமாக கேட்டுள்ளனர். ஆனால் காப்பீடு செய்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் நதீம் கேட்டபோது ரூ.15 லட்சம் மருத்துவனை தரப்பில் கோரியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசீதுகளை வாங்கிப் பார்த்தபோது அதில் கட்டணமாக 11.55 லட்சம் என கட்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக தொகையை நிர்ணயித்து மோசடி செய்ய முயன்றது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் நதீம் நேற்று புகார் தெரிவித்தார். இந்த புகார்கள் அடிப்படையில் விசாரணை நடத்த குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டிருந்த நிலையில், சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு அதிகாரிகள் விசாரணைக்கு சென்றனர்.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகின்றது. விசாரணை அதிகாரிகள் கேட்ட ஆவணங்களையும் கொடுக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ம அனுமதியை அதிகாரிகள் ரத்து செய்தனர். இதற்கான உத்திரவினை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவமனைக்கு வழங்கினார்.

மேலும் அந்த மருத்துவமனையில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை டிஸ்சார்ஜ் செய்யவும், விசாரணை முடியும் வரை புதியதாக யாருக்கும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று சுங்கம் பகுதியில் உள்ள மனு மருத்துவமனை மீதும் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து இருந்தனர். இந்த மனு மருத்துவமனை உட்பட 3 மருத்துவமனைகள் மீது புகார்கள் வந்துள்ள நிலையில் மற்ற மருத்துவமனைகளில் சுகாதார துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் . கூடுதல் கட்டணம் வசூல் செய்தற்கான ஆவணங்கள் இருக்கும் நிலையில் உரிய விளக்கம் இல்லை எனில் மற்ற மருத்துவமனைகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் சமீப காலமாக கொரொனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறிப்பிடதக்கது.

More articles

Latest article