சென்னை:
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை என்று பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்துள்ளார்.

பா.ஜ.கவில் முருகனுக்கும் அண்ணாமலைக்கும் பதவி கொடுப்பது தமிழகத்தை வலுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் எனவும் தனிப்பட்ட முறையில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே பா.ஜ.கவின் இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொங்கு மண்டலத்தை குறி வைத்து திமுக, பா.ஜ.க கட்சிகள் அரசியல் நகர்வுகளை செய்து வரும் வேளையில், அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு மறைவிற்கு பின்னர் துரதிஷ்டவசமாக மிக வலுவான தலைவரை அவர்களால் மக்கள் மத்தியில் கொடுக்க முடியவில்லை எனவும், அந்த தலைவியின் முழு பலத்துடன் இது வரை பெற்ற வெற்றியை இனி அவர்கள் பெறுவார்களா என தெரியாது என பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சனம் செய்துள்ளார்.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இன்றளவும் வலுவுடன் இருந்து வருகின்றது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மையான தொகுதிகளை அதிமுக கொங்கு மண்டலத்தில்தான் கைபற்றியுள்ளது. இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் கட்சியினை வலுவாக்க திமுகவும் பா.ஜ.கவும் தீவிர முயற்சிகளை துவங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாகவே கொங்கு மண்டலத்தை சேர்ந்த கட்சி பிரமுகர்களுக்கு இரு கட்சிகளும் முக்கியத்துவம் கொடுத்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

பா.ஜ.கவில் ஏற்கனவே கொங்கு மண்டலத்தை சேர்ந்த தேசிய குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர், எஸ்.ஆர்.சேகர், தேசிய இளைரணி செயலாளர், ஏ.பி.முருகானந்தம், மாநில துணை தலைவர் பேராசிரியர் கனசபாபதி, மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், என பெரிய பட்டியலே இருக்கின்றது.

இந்நிலையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாநில தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் , மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போலகொங்கு மண்டல திமுகவில் வலுவான தலைவர்கள் இல்லை என்பதை திமுக தலைமை உணர்ந்திருக்கின்றது. திமுக சுற்றுசுழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியும் இதை ஒரு முறை தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார். கொங்கு மண்டலத்தில் வலுவான தலைவர்களை உருவாக்க திமுக முயன்று வரும் நிலையில் ம.நீ.மவில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைந்துள்ளார்.