கோவை: ஈஷா மையத்தில் தங்கியுள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கோவை ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை ஆட்சியர் ராசாமணி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக செல்கின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

எங்கெல்லாம் கொரோனா பாசிடிவ் என்று கண்டறியப்பட்டு இருக்கிறதோ, அங்கெல்லாம் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளன. 700 மருத்துவ, வருவாய் பணியாளர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் மதுக்கரை, அன்னூர், மேட்டுப்பாளையம் , கோவை என 97 ஆயிரம் வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அத்யாவசிய தேவை தவிர வேறு காரணத்திற்காக பொதுமக்கள் வெளியில் வரக் கூடாது.

இறைச்சி கடைகள் நாளை முதல் இயங்க கூடாது. அவை மீண்டும் எப்போது செயல்படலாம் என்பது பின்னர் அறிவிக்கப்படும். ஈஷா மையத்தில் இருப்பவர்களுக்கு பரிசோதனை நடத்தியதில் தொற்று கண்டறியப்படவில்லை. ஆனால் அங்கு தங்கி இருப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.