கோவை: தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு கோவை உக்கம் பகுதியில் உள்ள பழமையான சிவன்கோயில் அரகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட ஜமேஷா முபின் என்பவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை வளையத்துக்குள் சென்றது.
இது தொடர்பாக பலரை கைது செய்து விசாரணை நடத்தி உள்ள என்ஐஏ, சிலரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. இந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர் உள்பட 5 பேர் மீது தேசிய புலனாய்வு முகமையின் (NIA அல்லது என்.ஐ.ஏ) அலுவலர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக ஷேக் ஹிதயாத்துல்லா, உமர் பரூக், பவாஸ் ரஹ்மான், ஷரண், அபு ஹனிபா ஆகியோர் மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்ததாக என்ஐஏ தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
கார் குண்டுவெடிப்பு தொடர்புடைய சம்பவங்களில் இவர்களுக்கு பங்கு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவர்களுடன் சேர்த்து கார் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் ஷேக் ஹிதாயத்துல்லா, உமர் பரூக் ஆகியோர் போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தயாரித்து, அதன் மூலம் கிடைத்த பணத்தில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தேவையான வெடிபொருட்களையும், தேவையான கருவிகளையும் வாங்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பவாஸ் ரஹ்மான், ஷரண் ஆகியோர் போலி சான்றிதழ் தயாரிக்க உதவி உள்ளனர். இதற்கு தேவையான பணத்தை அபு ஹனிபா அளித்துள்ளதாக அந்த அறிக்கையில் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த போலீசார், முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்திருந்தனர்.
இந்ந்நிலையில் தான், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ., அலுவலர்கள் கோவையில் முகாமிட்டு, தீவிர விசாரணை நடத்தி, உமர் பரூக், பெரோஸ்கான், முகமது தவுபிக், முகமது இத்ரீஸ், முகமது அசாருதீன், மற்றொரு முகமது அசாருதீன், தாஹா நசீர் உள்ளிட்ட 8 பேரையும் அடுத்தடுத்து கைது செய்தனர்.
கார் குண்டு வெடிப்பு வழக்கில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் மீது என்.ஐ.ஏ., அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் 4 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 2 இஸ்லாமிய இளைஞைர்கள் கைது – திடுக்கிடும் தகவல்கள்
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்புடைய 27க்கு மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை!
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது!