கோவை:  கார்  வெடிப்பில் உயிரிழந்த பயங்கரவாதி என கருதப்படும் ஜமேஷா முபின், குண்டு தயாரிக்கும் வேதிப்பொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள், அவரது டைரியில் இருந்து கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 23ந்தேதி அதிகாலையில் கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பாக  வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த முபின் என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார். பெரும் பரபரபபை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில்  அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், அவரது (முபின்) வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில்,   76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவை,  வெடிக்கும் தன்மை கொண்ட வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதை ஆய்விற்காக தடயவியல் குழுவினர் எடுத்துச் சென்றுள்ளார்கள். மேலும் கணினி, டைரி, அவரது போன் உள்பட பல்வேறு ஆவனங்களை காவல்துறையினர் எடுத்துச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டத்தில், அவர் வேதிப்பொருட்களை  அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் இருந்து வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்து இருக்கின்றனர். மேலும்,  ஜமேஷா முபீனின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட டைரி, அவரது கைப்பேசியில் இருந்த விவரங்கள் அவருடன் தொடா்பில் இருந்த நபா்கள் உள்ளிட்டோரிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அவா் வைத்திருந்த டைரியில் கோவையில் உள்ள 5 இடங்கள் சந்தேக குறியீடுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.   “சுற்றுலா தலங்கள்” என்ற சங்கேத குறியீட்டு பெயரில் கோவையில் உள்ள 5 முக்கிய இடங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

அதன்படி, கோவை ரெயில் நிலையம், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி விக்டோரியா ஹால், ரேஸ்கோர்ஸ், போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய 5 இடங்கள் அந்த டைரியில் இடம் பெற்றிருந்தன.  இந்த 5 இடங்களும் சுற்றுலா தலங்கள் அல்ல. பொதுமக்கள் தினமும் அதிக அளவு வந்து செல்லும் இடங்களாகும். எனவே இந்த 5 இடங்களிலும் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் கார்  குண்டுவெடிப்பு செய்ய திட்டமிட்டு இருந்தது அம்பலமாகி உள்ளது. 

மேலும், இந்த கார் குண்டுவெடிப்புக்கு   முன்னதாக அதே காரில் மாநகர பகுதிக்குள் ஜமேஷா முபீன் வேறு எங்கேனும் பயணித்துள்ளாரா என்பது குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அதேபோல அவரது கைப்பேசி பயன்பாடுகளை ஆய்வு செய்ததில், எளிய முறையில் கிடைக்கும் ரசாயன பொருள்களைக் கொண்டு குறைந்த அழுத்த வெடிபொருள்களைத் தயாரிப்பது குறித்த காணொலிகளை யுடியூப் சேனல்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பல இணையதளங்களை அவா் பாா்வையிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், தடை செய்யப்பட்ட பல இஸ்லாமிய இயக்கங்களின் அதிகாரபூா்வ இணையதளப் பக்கங்களை அவா் பாா்வையிட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. இதேபோல ஜமேஷா முபீன் டாா்க் வெப்சைட்டுகள் ஏதும் பயன்படுத்தி பயங்கரவாத அமைப்பினருடன் தொடா்பில் இருந்துள்ளாரா என்பது குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, உக்கடம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஜமேஷா முபீனின் நெருங்கிய உறவினா் அப்சல் கான் (28) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.  அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸாா் அவரது மடிக்கணினியை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதேபோல ஜமேஷா முபீனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற நபா்கள் பட்டியலைத் தயாா்செய்துள்ள போலீஸாா், அதனடிப்படையில் உக்கடம், ராமநாதபுரம் பகுதிகளில் வசிக்கும் 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வெடிப்பொருள்கள் தயாரிப்பதற்கான 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் பவுடர் போன்ற வேதிப்பொருள்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த பொருள்கள் அமேசான், ஃபிளிப்கார்ட் மூலம் ஜமேஷா முபீன் வாயங்கியது தெரியவந்துள்ளது.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு முகவரியில் இந்த வெடிபொருள்களை முபீன் வாங்கியிருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்த பொருள்களை பயன்படுத்தி வெடிகுண்டுகளை தயாரிக்க முபீன் திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 12 காா்கள் பறிமுதல்: வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 காா்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா்.  இதில், 7 காா்களின் உரிமையாளா்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததையடுத்து அந்த காா்கள் அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மீதமுள்ள 5 காா்களின் உரிமையாளா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைப்பதை அடுத்து போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்,

ஒருவேளை பயங்கரவாதிகள் திட்டப்படி, இந்த 5 இடங்களிலும் குண்டுவெடிப்பு  நடைபெற்றிருந்தால் எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள்  என்பதை சிந்தித்து பார்த்தாலே மனது திக்கென்று உள்ளது. அமைதிப்பூங்காவான தமிழ்நாடு திமுக ஆட்சியில் அமளிக் காடாக மாறி வருவது கண்கூடாக தெரிகிறது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழகஅரசுக்கு உள்ளது என்பதை மறந்துவிடாமல் இருப்பதே ஆட்சியாளர்களுக்கு நல்லது.