கோவை: கோயமுத்தூர்  கார் குண்டு வெடி விபத்து சம்பவத்தில் உயிரிழந்த பயங்கரவாதி  ஜமேஷா முபினின் மனைவி நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அவர் வாய் பேச முடியாதவர் என்பதால், எழுத்துமூலம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டு  அக்டோபர் 23-ம் தேதி கோவை உக்கடம் பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்தாண்டு  கார் குண்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். அவரது காரில் வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள், ஆணி, குண்டுகள், சிலிண்டர் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இது தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  ஜமேஷா முபின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் 120 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது திட்டமிட்ட சதிச் செயல் என சந்தேகிக்கப்பட்டது.  இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த பயங்கரவாதிகள், மாநிலத்தின் பல இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு தேசிய புலனாய்பு முகமையான என்.ஐ.ஏவிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் தற்போது வரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் அவர்களது குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கார் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் மனைவி கோவை நீதிமன்றத்தில் நேற்று வாக்குமூலம் அளித்தார். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் ஜே. எம் 4-வது நீதிமன்றத்தில் ஜமேஷா முபினின் மனைவி வாக்குமூலம் அளித்தார். அவர் வாய் பேசமுடியாத மற்றும் காது கேளாதவர் என்பதால் எழுத்து மூலமாக வாக்குமூலம் அளித்ததாக நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர்.