லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து $3M மதிப்புள்ள கோகைன் என்ற போதைப் பொருளை தனது சாமான் பையிலேயே விட்டு தப்பிச்சென்ற ஜெட்புளூ விமான பணிப்பெண் நியூயார்க் நகரில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
ஜெட்புளூ விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக இருக்கும் மார்ஷா கே ரெனால்ட்ஸ் புதன்கிழமை அன்று கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மத்திய அதிகாரிகளிடம் சரணடைந்தனர். இருந்தாலும் அவர் நியூயார்க் நகரம் எப்படி வந்தடைந்தார் என்பது குழப்பமாகவே உள்ளதென மத்திய அதிகாரிகள் கூறினர்.
வியாழக்கிழமை அன்று புரூக்ளின் நகரிலுள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க அட்டர்னி செய்தி தொடர்பாளர் தோம் ரோசெக் கூறினார்.
போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக (TSA) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அன்று ஒரு திடீர் பாதுகாப்பு சோதனைக்கு ரெனால்ட்ஸை அழைத்ததாக கூறினர். அப்போது அவரது சாமான்களிலிருந்து கிட்டத்தட்ட 70lbs கோகைன் கண்டெடுக்கப்பட்டது. இரண்டாம் சோதனைப்பகுதிக்கு சென்ற போது அவள் தன்னுடைய பையையும் காலணிகளையும் விட்டுவிட்டு வெறுங்காலுடன் ஓட்டமெடுத்து மின்படிக்கட்டுகளில் ஏறி தப்பிச்சென்றார் என விமான நிலைய போலீசார் தெரிவித்தனர்.விநியோகிக்கும் நோக்கத்துடன் கோகையின் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார் ரெனால்ட்ஸ்.
மிஸ் ஜமைக்கா வேர்ல்ட் 2008 இல் ரன்னர் அப் ஆக ரெனால்ட்ஸ் இருந்தார் என ரோசெக் அவர்கள் கூறினார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் 2004ல் பெண்கள் தடகள அணியில் மார்ஷா கே ரெனால்ட்ஸ் இருந்ததாக கூறப்படுகிறது.
FBI கொடுத்த உறுதிச்சான்றில், வெள்ளிக்கிழமை அன்று டெர்மினல் 4ல் உள்ள சோதனைச் சாவடிக்கு ரெனால்ட்ஸ் வந்த போது அவள் ஒரு ஜீன்ஸ் பேண்ட், குதிகால் செருப்பு மற்றும் ஒரு கருப்பு ஜாக்கெட் அணிந்திருந்தாகவும் “அறியப்பட்ட குழு உறுப்பினர் பேட்ஜ்” வைத்திருந்ததாகவும் இருக்கிறது. அச்சமயத்தில் அவள் பணியில் இருந்தாளா என்பது தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை.
திடீர் பாதுகாப்பு சோதனைக்கு தேர்வு செய்யப்பட்ட போது அவள் பதட்டமாகி இங்கும் அங்கும் சுற்றி பார்க்கத் தொடங்கினார் எனவும் அவரது மொபைல் போனிலிருந்து யாருக்கோ அழைக்க முயன்றார் எனவும் TSA அதிகாரி ஜேமி சாமுவேல் கூறினார். இரண்டாம் கட்ட சோதனைச் சாவடிக்கு அழைத்துச் செல்கையில் ரெனால்ட்ஸ் வேற்றுமொழி பேசத் தொடங்கினார் என திரு சாமுவேல் கூறினார். உள்ளே சென்றபின்னர், TSA அதிகாரி சார்லஸ் ஜேம்ஸ் அவளாது அடையாள அட்டையைக் கேட்டார்.”அந்நேரத்தில், ரெனால்ட்ஸ் தனது சாமான்களை போட்டுவிட்டு காலணிகளை கழற்றி எறிந்து ஓட தொடங்கினார்” என மனுவில் கூறப்பட்டுள்ளது. ரெனால்ட்ஸ் விட்டுச்சென்ற பையில் பச்சைக் காகிதத்தால் மூடப்பட்டிருந்த பதினொரு கோகையின் பொட்டலங்கள் “பிக் ரான்ச்” என பெயரிடப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. 68lbs க்கும் மேல் எடைக் கொண்ட கோகோயின் $ 3 M மதிப்பு இருக்கும்.