வாஷிங்டன்

லகெங்கும் உள்ள நாடுகளில் பிளாஸ்டிக் மூலம் அதிக அளவில் மாசு உண்டாக்கும் நிறுவனம் கோகா கோலா என மீண்டும் தெரிய வந்துள்ளது.

பிளாஸ்டிக் என்பது சுற்றுச் சூழல் மாசை அதிகப்படுத்தி வருகிறது.  இந்த பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தால் உண்டாகும் கார்பன் மோனாக்சைட் சுற்றுச் சூழலைப் பாழாக்கி விடுகிறது.   அத்துடன் இவ்வாறு எரிப்பதாலும் பிளாஸ்டிக் முழுமையாக அழிவதில்லை.   அத்துடன் மண்ணிலும் பிளாஸ்டிக் மக்குவது கிடையாது.    இதனால் அதை அழிப்பது இயலாததாக உள்ளதால் பல நாடுகளில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம் தொடர்ந்து உலகத்தில் மாசு ஏற்படுவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.    இந்த ஆய்வு நிறுவனத்தில் உள்ள 72541 தொண்டர்கள் 51 நாடுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளைச் சேர்த்து ஆய்வு நடத்தப்பட்டது.  மொத்தமாக இதில் கிடைத்த உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் நிரப்பப்பட்டு உபயோகத்துக்குப் பின் குப்பையில் போடப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் 43% கோகா கோலா புட்டிகள் ஆகும்.

அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் கோகா கோலா நிறுவனம் அதிக பிளாஸ்டிக் குப்பைகளை உருவாக்குவது இந்த ஆய்வில் தெரிய வந்தது  இதற்கு அடுத்தபடியாக நெஸ்லே நிறுவனம் மற்றும் பெப்சிகோ ஆகியவை உள்ளனர்.   அத்துடன் ஹேன்கின் எனப்படும் பீர் நிரப்பப்படும் பிளாஸ்டிக் புட்டிகளும் அதிக அளவில் உள்ளன.

இது குறித்து கோகா கோலா  நிறுவனம், “எங்களுடைய பாக்கிங் முடிந்த பிறகு அது எங்களுக்கு சொந்தமான பொருளாகக் கருதக்கூடாது.    மற்ற நிறுவனங்களுடன் இணைந்து நாங்களும் பிளாஸ்டிக் உபயோகத்தை வெகுவாக குறைத்துள்ளோம்.   ஆனால் அவற்றை நாங்கள் விற்ற பிறகு அழிப்பது எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வராது.  ஆயினும் எங்களால் முடிந்த அளவு பிளாஸ்டிக் மூலம் உலகம் மாசு அடைவதைக் குறைத்து வருகிறோம்.” என அறிவித்துள்ளது.