ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில், ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று, பாஜகவிடம் இருந்து  ஆட்சியை பிடுங்கி உள்ள நிலையில், மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் துணைமுதல்வர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

81 இடங்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில்  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்- ராஷ்டிரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் ஒரே அணியாக களம் இறங்கின. முதல்-மந்திரி வேட்பாளராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் அறிவிக்கப் பட்டார்.

பா.ஜனதா கூட்டணியில் இருந்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜா தந்திரிக்), அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகிய கட்சிகள், தேர்தலுக்கு முன்பே கூட்டணியில் இருந்து விலகி விட்டதால், பா.ஜனதா தனித்து போட்டியிட்டது.

இதுதவிர, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகளும் போட்டியிட்டன.

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி 47 இடங்களை கைப்பற்றின. இதனால், அங்கு பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டு உள்ளது.

ஆட்சியை கைப்பற்றி ஜேஎம்எம், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணி சார்பில், மாநில முதல்வராக   ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித்தலைவர் ஹேமர்ந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில்,  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று தலைநகர் ராஞ்சியில் நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் பதவிகள் ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதில், காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் வரும் 28-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் மாநிலத்தின் 11வது முதல்வராக பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.