ஜெருசலேம்: கடும் அரசியல் இழுபறிக்குப் பின்னர், இஸ்ரேலில் பெஞ்சமின் நேதன்யகு தலைமையிலான கூட்டணி அமைச்சரவை பதவியேற்றது. இதன்மூலம், அந்நாட்டில் நிலவிய 1.5 ஆண்டுகால அரசியல் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
ஆனாலும், நேதன்யகுவின் கட்சியான லிகுட் கட்சிய‍ைச் சேர்ந்த சில மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெஞ்சமின் நேதன்யகுவின் லிகுட் கட்சியும், எதிர்க்கட்சியான புளூ அண்ட் ஒயிட் கட்சியும் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன. ஏனெனில், தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதன்படி, நேதன்யகு முதல் 18 மாதங்களுக்குப் பிரதமராகவும், அதற்கடுத்த காலக்கட்டத்திற்கு புளூ அண்ட் ஒயிட் கட்சியின் தலைவர் பென்னி கான்ட்ஸும் பிரதமராகவும் பதவி வகிப்பார்கள்.
மேலும், நேதன்யகு பிரதமராக இருக்கும் காலங்களில், பென்னி கான்ட்ஸ் ராணுவ அமைச்சராக இருப்பார். கடந்த 14ம் தேதியே பதவியேற்றிருக்க வேண்டிய கூட்டணி அமைச்சரவை, உள்கட்சி அதிருப்தி காரணமாக நேற்றுதான் பதவியேற்றது.