கூட்டணி கலாட்டா-5:
ஜெயலலிதா என்கிற ஆளுமை இல்லாமல் அதிமுக சந்திக்க இருக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. 2016 டிசம்பரில் அவரது மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதிலும், பின்னர் இணைப்பு நாடகம் நடத்தியலும் பாஜக முக்கிய பங்கு வகித்தது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த சசிகலா, ஜெ. மறைந்ததும் ஓபிஎஸ்-ஐ மிரட்டி ராஜினாமா கடிதம் எழுதி வாங்கி, முதல்வர் பதவியை கைப்பற்ற நினைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.சமாதியில் ஓ.பிஎஸ் தியானம் இருந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் கையில் எடுத்து, சசிகலா உள்பட குற்றவாளிகளின் மீதான தீர்ப்பை உறுதி செய்ய வைத்து, அவரை அடைக்கும் முயற்சியை பாஜக கையில் எடுத்தது.
இருந்தாலும், சிறைக்கு செல்லும்முன், தனது விசுவாசியாக அறியப்பட்ட எடப்பாடி பழனிசாமியிடம் முதல்வர் பதவி ஒப்படைத்துவிட்டு சென்றார். ஆனால், அதன் பிறகு ஓபிஎஸ்-ஐ வைத்த பாஜக நடத்திய அரசியல் சடுகுடு ஆட்டத்தில், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஓரம்கட்டி விட்டு, உடைந்தகட்சிகளை ஒட்ட வைப்பதாக நாடகமாடி, ஓ.பி.எஸ் உடன் எடப்பாடியை ஒன்றிணைந்து, அதிமுக ஆட்சி தொடர்ந்து வருகிறது, இருந்தாலும், இருவர்களுக்குள்ளும் அதிகார போட்டி இன்றுவரை நிலவி வருகிறதுஎன்பதே உண்மை.இது சமீபகாலமாக வெளியாகி வரும், தனித்தனியான தேர்தல் விளம்பரங்களிலும் உறுதியாகி உள்ளது.
இதுபோன்ற சூழலில் வரும் சட்டமன்றத்தேர்தல் அதிமுகவுக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சசிகலாவின் வருகை அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவும்அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளதும் தற்போதைய இரட்டைத் தலைமைக்கு கிலியை ஏற்படுத்தி உள்ள. அதிமுக தலைமையின் உத்தரவை மீறி பலர் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுத்துள்ளதும், அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலர் ரகசியமாக சசியிடம் பேசி வருவதாகவும் நம்பப்படுகிறது.
தமிழக சட்டசபைக்குத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், சசிகலாவின் விடுதலை அரசியல் களத்தில் மேலும் சூட்டைக்கிளப்பி உள்ளதுடன் சசிகலாவை வைத்து, அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி மீண்டும் குளிர்காய பாஜக முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகத்தையும் அதிகரித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்தாலும், சசிகலா மீது சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்துகொடுப்பதற்காகச் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சத்யநாராயணாவுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த புகார், சிறைத்துறை ஐஜியாக இருந்த ரூபா கொடுத்துள்ள சிறை விதிகள் மீறல், பண மதிப்பிழப்பின்போது செல்லாத ரூபாய் நோட்டுகளைக் கொண்டு சசிகலா வாங்கிக் குவித்த 1,674 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது தொர்பான வழக்கு, வருமான வரித்துறை நடவடிக்கை வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதைக்காரணம் காட்டி, சசிகலாவைச் சிறையிலிருந்து வெளியே வரவிடாமல் தடுக்கவும், தேர்தல் முடிந்த பிறகே, சசிகலாவை விடுதலை செய்யுங்கள் என பி.ஜே.பி தலைமையிடம் முதல்வர் எடப்பாடி வேண்டிக்கொண்டதாகவும், ஆனால், எடப்பாடியின் பேச்சை பாஜக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது அதனால், பாஜகமீது அதிமுக சந்தேகக்கண்ணோடுதான் இருந்து வருகிறது.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம்தேதி அன்று, பெங்களுரு சிறைக்கு செல்லும் வழியில், ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா, ஆக்ரோஷமாக சமாதியியில் சத்தியம் செய்து சபதம் போட்டார். தற்போது விடுதலையாகி தமிழகம் வந்துள்ள சசிகலா வரும் பிப்ரவரி 15ந்தேதி அன்று மீண்டும் ஜெ.சமாதிக்கு சென்று, தனது சபத்தை நிறைவேற்றும் முயற்சியை தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், `கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே மக்கள் பிரதிநிதி பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழப்பதோடு, தண்டனை முடிந்தபிறகும் அடுத்த ஆறாண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது’ . அதனால் சசிகலாவால் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவோ, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவோ முடியாது என்றாலும், அவரை வைத்து அதிமுகவின் வாக்குகளை பிரிக்க முடியும் என்பதையும் மறுக்க முடியாது.
ஏனென்றால், மதுரையை சுற்றியுள்ள பல மாவட்டங்களில் சசிகலாவின் சமுதாயத்தினர் அதிகஅளவில் வசித்து வருவதால், அவர்களின் வாக்குகளில் பெருமளவு சசிகலாவுக்கு கிடைக்கும் நிலையே இன்றும் தொடர்கிறது. காரணம், அதிமுகவின் வெற்றிக்கு பல தொகுதிகளில் காரணமாக அமைவதும் முக்குலத்தோர் வாக்குகள்தான் என்பதே. அதிமுகவில் முக்குலத்தோரைச் சேர்ந்த பலர் அமைச்சர்களாகவும், உயர் பதவியில் இருந்தாலும், அவர்களில் பெரும்பாலானோர், ஜெ இருக்கும்போதே, சசிகலாவின் ஆதரவால் பதவிக்கு வந்தவர்களே. அதுபோல, ஜெ. உயிரோடு இருக்கும்போதே, அதிமுகவில் தனி அதிகார பீடத்தை ஏற்படுத்திக்கொண்டு கட்சி வழிநடத்தியவரும் சசிகலாதான் என்பதை மறுக்க முடியாது. இதுபோன்ற காரணங்களால், அதிமுகவின் வாக்குகள் சிதறும் என்பதில் சந்தேகமில்லை.
அதனால், சசிகலாவை வைத்து அதிமுகவிலும், தமிழக அரசியல் களத்திலும், வடமாநிலங்களைப்போல ஆட்டத்தை தொடங்க பாஜக முயற்சிக்கும், ஆனால், அவர்களின் பாச்சா தமிழக மக்களிடையே எடுபடாது என்றாலும். அதிமுகவை பலமிழக்க செய்யும் என்பதே உண்மை. தமிழக தேர்தல் களத்தில் பாஜகவின் பினாமியாக நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்பட சில ஜாதிய கட்சிகளும் உலா வருகின்றன என அரசியல் நோக்கர்கள் கருதி வரும் சூழலில், அதிமுகவை சின்னாப்பின்னப்படுத்தி, தாமரையை தமிழகத்தில் மலர வைக்கும் ஆசையில் திளைத்துவரும் பாஜக, எந்த எல்லைக்கும் செல்லும் என்பது, மற்ற மாநிலங்களில், சமீபகாலமாக மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும நிகழ்வுகளை வைத்து தெரிந்து கொள்ள முடியும்.
கிரிமினல் அரசியலை எதிர்ப்பதாக கபட வேடமாடும் பா.ஜ.க தங்கள் நலனுக்காக, கிரிமினல்கள் தங்களது கட்சியில் சேர்த்து பாதுகாப்பு வழங்கி வருவதும், கிரிமினல் அரசியலை ஊக்குவிப்பதும் அனைவரும் அறிந்ததே. அதுபோல, தமிழக அரசியல் களத்தில், கிரிமினலான சசிகலாவை வைத்தும் தனது ஆட்டத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
சசிகலாவை மீண்டும் அதிமுகவுக்கு தலைமை ஏற்கும் வகையில், டிடிவி தினகரன், தனது நண்பர் மல்லிகார்ஜூன், உதவியாளர் ஜனாவுடன் டெல்லி சென்று பாஜக முக்கிய தலைவர்களை சில மாதங்களுக்கு முன்பே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு பாஜக தலைமை பச்சைக்கொடி காட்டியதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, டிடிவி மீதான இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்தது உள்பட பல வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தலைநகர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அதிமுக அமைச்சர்களுக்குள் மதுரை மண்டலம், கொங்கு மண்டலம் என இரு கோஷ்டிகள் தனித்தனியாக செயல்பட்டு, தங்களது வீர தீர பராக்கிரமங்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், தற்போது சசிகலா விடுதலை, மற்றும் டிடிவி தினகரன் சசிகலாவை முன்னிட்டு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் போன்றவைகளால் அதிமுக கலகலத்துப் போயுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகச, தாங்கள் கேட்டபடி அதிமுக தலைமை தொகுதிகளை ஒதுக்க மறுத்தால், அதிமுகவில் உள்ள சில முக்கிய தலைவர்கள் மூலம் சசிகலாவை கட்சிக்குள் புகுத்த முயற்சிக்கும், அன் காரணமாக, அதிமுகவை பலவீனப்படுத்தி,இரட்டை இலையை முடக்கும் முயற்சியில் பாஜக இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி பெரும் தோல்வி அடைந்ததையடுத்து, இரு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை வீசி வருகின்றனர். பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சிகளும் முட்டிக்கொண்டே இருந்தன. சமீ காலமாக, கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக, பாஜக அதிமுக இடையே உரசல் நீடித்து வருகின்றன..
தமிழகத்தில் காலூன்ற விரும்பும் பாஜக, வேல்யாத்திரை உள்பட பல்வேறு நிகழ்வுகள் மூலம் மக்களிடையே செல்வாக்கை பெருக்கி விடலாம் என்று குட்டிக்கரணம் அடித்தும், அது மக்களிடையே வரவேற்புக்கு பதில் எதிர்ப்பையே சம்பாதித்துள்ளது. அதுபோல, விவசாயிகள் போராட்டம்மீது அக்கறையில்லாமல் செயல்பட்டு வரும் பாஜக தலைமையின் அதிகாரப்போக்கு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தார்வார்ப்பது, வேலையில்லா திண்டாட்டம், எரிபொருள் விலைஉயர்வு, ஜிஎஸ்டி போன்றவை தமிழக மக்களிடையே பாஜக மீதானஅதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது. இதனால், பாஜகவுக்கு தமிழகத்தில் வாக்குகள் கிடைக்காது என்பதால், சசிகலாவை வைத்து தேர்தல் களத்தில் கலகமாட பாஜக தலைமை திட்டமிட்டு வருகிறதோ என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது..
(தொடரும்)
கூட்டணி கலாட்டா -தொடர்1: கூட்டணி கட்சிகளை வேண்டா விருந்தாளியாக நினைக்கும் திமுக தலைமை….
கூட்டணி கலாட்டா-2: கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைக்க திமுக திட்டமா…?
கூட்டணி கலாட்டா-3: கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரசுக்கு நெருக்கடி தரும் திமுக…
கூட்டணி கலாட்டா-4: நாடாளுமன்ற அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா….?