திருச்செந்தூர்: 

திருச்செந்தூர் அருகே, கப்பலில் இருந்து நிலக்கரி இறக்கும் வகையில் நிலக்கரி இறங்கு தளம் மற்றும் கடல் பாலம் அமைப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் தங்கள் படகுகளுடன் கடலுக்குள் வரிசையாக படகை நிறுத்தியும், அவர்களின் குடும்பத்தினர் கடற்கரையில் கடலுக்குள் இறங்கியும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை, கல்லாமொழி, குலசேகரப்பட்டிணம், மணப்பாடு, பெரிய தாழை என மீனவர்கள் கிராமங்கள் உள்ளது. ஏற்கனவே உடன்குடி அருக அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கடல் வழியாக கப்பலில் கொண்டு வந்து இறக்க வசதியாக திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைப்பதால் ஆலந்தலை பகுதிக்குள் கடல்நீர் புகுந்து விடும் என்பதால் அந்த திட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில்,  கல்லா மொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்ககூடாது என்றும், ஆலந்தலை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆலந்தலை பகுதி மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கடற்கரையில் நிறுத்தியிருந்தனர். சிலர் கடலுக்குள் படகை வரிசையாக நிறுத்தியும், மீனவர்களின் குடும்பத்தினர் கடற்கரையில் மனிதசங்கிலி போன்று வரிசையாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.