சென்னை: கொரோனா பாதிப்பால் நேரடி வகுப்புகளுக்கு தற்காலிக மூடுவிழா நடத்தப்பட்டுள்ளதால், ஆன்லைன் வழியான பயிற்சி வகுப்புகளில் களமிறங்கி, தங்களின் கல்லாக் கட்டும் நடவடிக்கைகளை ஜோராக தொடர்கின்றன தனியார் பயிற்சி மையங்கள்.
நீட் மற்றும் ஜேஇஇ போன்ற பல்வேறான மாநில மற்றும் தேசியளவிலான நுழைவுத் தேர்வுகளை முன்னிட்டு, பல்லாயிரம் கோடிகளில் பயிற்சி மையங்கள் தொடர்பான வணிகம் நாட்டில் ஊக்குவிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், புதிய கல்வியாண்டு தொடங்கும் சமயத்தில், கொரோனா வைரஸ் பரவல் நாட்டை ஆட்டுவித்து வருகிறது. இதனால், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
எனவே, பயிற்சி மையங்களால் நேரடி வகுப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் வழியிலான நடைமுறையை தனியார் பயிற்சி மையங்கள் துவக்கியுள்ளன.
பயிற்சி மைய ஆசிரியர்கள், பயிற்சி மையங்கள் அல்லது வீடுகளிலிருந்து வீடியோ கான்ஃபரன்சிங் வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வழியாக மட்டுமின்றி, மொபைல் ஃபோன்கள் வழியாகவும் செயல்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.