சென்னை: கூட்டுறவு சங்கக் கடன் தொடர்பாக தமிழகஅரசு பிறப்பித்த சுற்றறிக்கைக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  கூட்டுறவுக் கடன் சங்கங்களால் வழங்கப்படும் காசோலை தொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர்  பிறப்பித்த சுற்றறிக்கைக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் வழக்கமாக, வார்டு உறுப்பினர்களை போல 5 ஆண்டுகள். அதன் படி கடந்த அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடத்தப்பட்டு ஆளுங்கட்சியினர் பலர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பதவியை காலி செய்யும் நோக்கில், அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகளாக குறைத்து சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றினார். அவர்களின் பதவி பறிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. ஆனால், தமிழகஅரசின் கூட்டுறவு சங்க மசோதாவிற்கு தமிழக ஆளுநர் இன்னும்  ஒப்புதல் அளிக்காத நிலை உள்ளது.

இந்த நிலையில், கூட்டுறவு சங்க பதிவாளர் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்க தலைவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுக் கடன் சங்கங்களால் வழங்கப்படும் காசோலைகளில் சங்கத் தலைவரின் கையொப்பம் தனியாகவோ அல்லது சங்கச் செயலாளருடன் கூட்டாகவோ இடம் பெற வேண்டிய அவசியம் இல்லை என சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையானது,  உள்நோக்கத்துடனும், சட்டவிரோதமாகவும் மற்றும் கூட்டுறவு தன்னாட்சிக்கு விதிகளுக்கு எதிராகவும் உள்ளது.  இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் ஜி. ஆர் சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நடைபெற்றது. அப்போது,  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகஅரசு தன்னிச்சையாக இந்த சுற்றறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. இது கூட்டுறவு தன்னாட்சிக்கு விரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதற்கு தமிழகஅரசு வழக்கறிஞர்  எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  தமிழக அரசின் கூட்டுறவு சங்கம் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.