சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக தற்காலிக மாக இரும்பு பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி. மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. அதாவது, தலைநகர் சென்னையில் Phase -1 திட்டத்தின் கீழ் நீல வழித்தடம் (விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம்), பச்சை வழித்தடம் (சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை) என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கும் திட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளது.
அதே வேளையில், Phase -2 திட்டத்தில் ஊதா வழித்தடம் (மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட்), காவி வழித்தடம் (கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை), சிவப்பு வழித்தடம் (மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர்) என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
மெட்ரோ ரயிலின் 2வது கட்டம், மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கான திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை 2026ஆம் ஆண்டு நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஊதா வழித்தடத்தில் (Corridor-3) கெல்லீஸ் முதல் தரமணி வரை சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமையப் போகிறது. இது அடையாறு ஆறு மற்றும் சேத்துபட்டு ஏரி ஆகியவற்றின் வழியே செல்கிறது. குறிப்பாக KMC மற்றும் சேத்துப்பட்டு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே நீருக்கு அடியில் சுமார் 30 மீட்டர் ஆழத்தில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மாதவரத்தில் இருந்து சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கிமீ நடைபாதை-3 இன் ஒரு பகுதியாக அடையாறு ஜங்ஷனில் நிலத்தடி மெட்ரோ நிலையம் அமைக்க உள்ளது. இதில், கிரீன்வேஸ் ரோடு மற்றும் அடையாறு ஜங்ஷன் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையில் அடையாறு ஆற்றின் கீழ் இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் நீருக்கு அடியில் மெட்ரோ என்ற திரில் அனுபவத்தை CMRL அறிமுகம் செய்யப் போகிறது. இதற்கான ஒப்பந்தம் L & T நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் நீருக்கு அடியில் மண் பரிசோதனை உள்பட பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
இது கிரீன்வேஸ் சாலை மற்றும் அடையாறு டிப்போ நிலையங்களை OMRக்கு செல்லும் முன் இணைக்கும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளது. அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதிக்கு கீழே இரட்டை சுரங்கப்பாதைகள் மற்றும் நிலத்தடி அடையார் சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதால், அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதியை உடைத்து எடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் தீர்மானித்து உள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்தை சரி செய்ய, தற்காலிகமாக இரும்பு பாலத்தை அமைத்து, வாகன போக்குவரத்து தடங்கலின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க தீர்மானித்து உள்ளது.
இதற்காக அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதியான, மேம்பாலத்தில் இருந்து மற்றும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் செல்லும் பகுதி (எல்.பி.ரோடு இடித்து தரைமட்டமாக்கப்பட உள்ளது. கீழே இரட்டை சுரங்கப்பாதைகள் செல்ல உள்ளதால், அங்கு அமைக்கப்பட் டுள்ள செங்குத்தான தூண்கள் அகற்றப்பட வேண்டியது உள்ளது. இதனால், அந்த பகுதி இடிக்கப்பட்டு, வாகன போக்குவரத்துக்கு தற்காலிக இரும்பு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த “ஸ்டீல் டெக் பாலம் சர்தார் படேல் சாலை மற்றும் எல்பி சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இதில், லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் தவிர, மற்ற அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், கிரீன்வேஸ் ரோடு மெட்ரோ நிலையத்திற்கான சுரங்கப்பாதை இம்மாத இறுதியில் தொடங்கலாம் என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், மஞ்சம்பாக்கம், காட்டுப்பாக்கம், MIOT மருத்துவமனைகளுக்கு அருகில், சோழிங்கநல்லூர் மற்றும் தொரைப்பாக்கம் போன்ற இடங்களில் சேவை பாதைகளில் இதேபோன்ற தற்காலிக இரும்பு பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கூறிய சிஎம்ஆர்எல் செய்தித் தொடர்பாளர் எல் கிரிராஜன், அடையாறு மற்றும் பிற இடங்களில் புதிய பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது குறித்த கேள்விகளுக்கு தெரியாது என்றவர், “விபத்து ஏற்பட்டால் தற்காலிகமாக ரயில்களை இயக்குவதற்காக இதுபோன்ற ஸ்டீல் டெக் பாலங்கள் ரயில்வேயால் கட்டப்படுவது வழக்கம். தற்போது உள்ள தொழில்நுட்பத்தின் மூலம், ஒரு வாரத்தில் இரும்பு தூண்கள் கொண்ட பாலம் கட்டப்பட்டு, மெட்ரோ ரயில் பணிகள் முடியும் வரையிலான சில ஆண்டுகள் நீடிக்கும்” என்று தெரிவித்து உள்ளார். மேலும், சுரங்கம் தோண்டுவதற்கான இயந்திரங்கள் வந்துள்ளதாகவும், பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறினார்.