சென்னை:

கோயம்பேடு வியாபாரிகள் மற்றும் அங்கு சென்ற பொதுமக்களுக்கு கொரோனா பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட் செல்ல சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) அதிரடியாக தடை விதித்துள்ளது.

பொதுமக்கள்  கோயம்பேடு சந்தைக்குக் சென்று, காய்கறிகள், பழங்கள், பூக்கள் வாங்க  செல்வதற்கு அனுமதியில்லை என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், அந்த பகுதியில் வளசரவாக்கத்தைச்சேர்ந்த சலூர் கடை நடத்துபவர் ஒருவர் திறந்த வெளியில் பலருக்கு கடந்த ஒருவாரமாக  முடிவெடிட்டி  வந்துள்ள்ளார். அவருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் முடி வெட்டியவர்களை சுகாதாரத்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் குவிவதை தடுக்கும் வகையில் கோயம்பேடு சந்தையை மூட தமிழகஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க பிரநிதிகளுடன் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர்  விவாதித்தனர்.

கோயம்பேடு சந்தையை கேளம்பாக்கம் பகுதிக்கு மாற்றலாம் என அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கு வியாபாரிகள் சம்மதம் தெரிவிக்காத நிலையில், 2 நாட்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தையும் இழுபறியாக இருந்தது. இறுதியாக அரசின் கட்டுப்பாடுகளுக்கு வியாபாரிகள் இசைந்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, 600 மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் சமூக விலகளுட்ன் சில்லறை வியாபாரிகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, கோயம்பேடு சந்தையில் சில்லறை வர்த்தகம் குறித்து மீண்டும் அரசு அறிவிக்கப்படும் வரை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் யாரும் கோயம்பேடு சந்தைக்கு வர அனுமதி கிடையாது என்றும் சிஎம்டிஏ அறிவித்துஉள்ளது.

மேலும்,  சென்னையில் காய்கறிகள், பூக்கள் திறந்த மைதானம் மற்றும் பஸ் டிப்போக்களில் விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

கோயம்பேடு சந்தையில் செயல்பட்டு வரும் மலர் மற்றும் பழக் கடைகள் இனிமேல் மாதவரம் பஸ் டெர்மினஸாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.