டெல்லி: வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை செலுத்தி ஆய்வு செய்ய வேலூர் சிஎம்சி-க்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக நிதிஆயோக் மெம்பர் டாக்டர் வி.கே.பால் தெரித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெருமளவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் 2 டோஸ்களாக போடப்பட்டு வருகின்றன. சில இடங்களில் முதல் முதல்டோஸ் ஒரு நிறுவன தடுப்பூசியும், 2வது டோஸ் வேறு நிறுவன தடுப்பூசிகள் போடப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து, உத்தரப்பிரதேசத்தின் சித்தார்த் நகரில் முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசியும், இரண்டாவது தவணை கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுக்கொண்ட 18 பேருக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரே வகைத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களைவிடப் பாதுகாப்பும், நோய் எதிர்ப்பாற்றலும் சிறப்பாக கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தி ஆய்வு மேற்கொள்ள வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு (CMC) இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி,  முதல் மற்றும் 2வது டோசில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போட்டுச் சோதனை மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக நிதிஆயோக் மெம்பர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.