விழுப்புரம்
இன்று விழுப்புரம் மாவட்டத்த்ல், முதல்வர் முக ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்..
இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வருகிறார். மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சேகர், தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி ஆகியோர் முன்னிலையில் திமுகவினர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
வரவேற்பு முடிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் நகரில் சென்னை சாலையில் மேம்பாலம் வழியாக ஜே.வி.எஸ். திருமண மண்டபம் வரை நடந்தே சென்று (ரோடு ஷோ) பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். பிறகு அந்த மண்டபத்தில் நடைபெறும் திமுக வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார்.
அதற்குப் பின்னர் திண்டிவனத்தில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் வருகை தரும் அவர், ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறார்.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை விழுப்புரம் வழுதரெட்டியில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
அதன் அருகில் நடைபெறும் விழாவில் அவர் பங்கேற்று, பல்வேறு துறைகள் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்ரி விழாவை முடித்துக்கொண்டு அன்று மதியமே அவர், சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.