சென்னை

கொரோனா நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்கும் சிறுவர்களுக்குத் திருக்குறள் நூலைப் பரிசாக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்குகிறார்.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன்,மருந்து, உள்ளிட்டவற்றுக்கும் தேவை அதிகரித்துள்ளது.

இதையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மக்களிடமும் நிறுவனங்களிடமும் கொரோனா நிவாரண நிதி அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.  அதையொட்டி பல தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் பல சிறுவர் மற்றும் சிறுமியர் தங்களின் சொந்த சேமிப்பில் இருந்து கொரோனா நிவாரணத்துக்காக முதல்வருக்கு நிதி அளித்து வருகின்றனர்.  இது பொதுமக்கள் அனைவரையும் மகிழ்வில் ஆழ்த்தி உள்ளது.  இதையொட்டி முதல்வர் மு க ஸ்டாலின் குழந்தைகளுக்குத் திருக்குறள் நூலை அன்பளிப்பாக வழங்க உள்ளார்.

அவர் தனது டிவிட்டரில்

தங்களின் சின்னஞ்சிறு கனவுகளுக்காக சிறுகச் சேமித்ததையும்  #Donate2TNCMPRF க்கு வழங்கிடும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது!

தமிழ் மண்ணில் அறம் தழைக்கட்டும்!

பிள்ளைச்செல்வங்களுக்கு திருக்குறள் நூலொன்று அன்புடன் அனுப்பி வைக்கப்படும்!

ஈதல் இசைபட வாழ்தல்…

என பதிந்துள்ளார்.