சென்னை: முதல்வரே வேந்தர் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என பேரவையில் ஆளுநர் மீதான தனி தீர்மானத்தின்மீது பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினார். பின்னர் இதற்கு முதலமைச்சர் மற்றும் பதில் கூறிய நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களில் 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய விவகாரம் சர்ச்சையை எற்படுத்தியது, அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு சட்டபேரவை சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இந்த தீர்மானத்தின்மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, தீர்மானத்தின்மீது உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்கள் கருத்துக்களை பேச வேண்டும். பேச முன்வருகின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நம்முடைய சட்டமன்ற மரபு, மாண்பு, இறையான்மையை பாதுகாத்திட வேண்டும். இந்திய குடியரசுத் தலைவர் பற்றியோ, இந்திய நாட்டில் உள்ள நீதிமன்றங்களை பற்றியோ அல்லது மாண்புமிகு ஆளுநர்கள் பற்றியோ எந்த விதமாக கருத்துக்களையும் சொல்ல வேண்டியதில்லை.. அதற்கான அனுமதி உங்களுக்கு மறுக்கப்படுகிறது என்றார். இருந்தாலும் பல உறுப்பினர்கள் சபாநாயகரின் எச்சரிக்கையை மீறி ஆளுநர் குறித்து பேசினார்.
இந்த தீர்மானத்தின்மீது பேசிய பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, சட்டமன்றத்தை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக்கூடாது என்று என்றவர், ஆளுநர் குறித்து பேசக்கூடாது என சபாநாயகர் அறிவுறுத்திய பிறகும் ஆளுநர் குறித்து பேசியதை ஏற்க முடியாது என்றார்.
தொடர்ந்து பேசியவர், இந்த சட்டமன்றம் ஒரு மாண்பும், மரபும் மிக்கது. இதை பொதுக்கூட்டமாக மாற்றிவிடக்கூடாது என்பதே என்னுடைய கோரிக்கை.. இங்கு முதல்வர் பேசியிருந்தார். ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் நிதானமாக பேசினார். ஆனால், இங்கு பலரும் அப்படியில்லை.. ஆளுநர் குறித்து நிதானமில்லாமல் பேசுகிறார்கள்.. கருத்து வேறுபாடு பல இருக்கலாம்.. ஆனால், வேந்தர்களை நியமனம் செய்வது என்பது, ஆளுநர்களுக்குத்தான் அதிகாரம் வேண்டும் என்று, இதே சபையில் கடந்த 1968-ல் கலைஞர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார்.. ஆனால், இன்று, தீர்மானம் வேறுவிதமாக இயற்றப்பட்டுள்ளது.
இது சட்டமன்றத்துக்கு முரண்பாடானது என்றே நான் நினைக்கிறேன். இந்த அரசாங்கம் கூர்மையான போக்கு கடைப்பிடிக்க வேண்டும், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்று அரசியல் சாசனமே சொல்கிறது” என்றார் நயினார் நாகேந்திரன்.
இதையடுத்து குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அப்போதெல்லாம் ஆளுநர்கள், அரசுடன் பேசித்தான் துணைவேந்தர்களை நியமிப்பார்கள் என்று விளக்கமளித்தார்.
நயினார் நாகேந்திரனுக்கு பதில் கூறிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உறுப்பினர் பேசியபோது, வேந்தர்கள் எதோ தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எல்லாம் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டார். அரசியலில் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டார். அதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். மேற்கு வங்காளத்தில் இருக்க கூடிய மத்திய பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரே இந்திய நாட்டினுடைய பிரதமராக இருப்பவர் தான். இந்திய பிரதமர் மோடி தான் அதனுடைய துணைவேந்தராக இருக்கிறார். இது மட்டும் எப்படி நடந்தது. ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் அவருடைய மாநிலத்தில் கூட இல்லை.
மேற்கு வங்காளத்தில் உள்ள மத்திய பல்ககலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கிறார் என்று சொன்னால், அதற்கு வழிவகுக்குற சட்டம் இதற்கு வழி வகுக்காதா?, குஜராத்திலேயேயும் பல்வேறு பல்கலைக்கழகங்களிலே அந்த முதல்வர் தான் துணைவேந்தராக இருந்துகொண்டு இருக்கிறார்.
தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் எல்லாம் பல்கலைக்கழக துணை வேந்தர்களை அந்தந்த மாநில முதல்வர், அந்த அரசு யாரை பரிந்துரை செய்கிறாரோ யாரை பரிந்துரை செய்கிறதோ அவர்களை தான் நியமிக்க வேண்டும் என்று சட்டங்களும் அங்கே இருக்கின்றன. ஆகவே அந்த அடிப்படையில் தான் நாங்கள் இதை வலியுறுத்துகிறோம்.
அரசியல் அமைப்பு சட்டத்தில் மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அரசியல் அமைப்பு சட்டமே இதற்கான வழிவகைகளை வகுத்திருக்கிறது. தமிழக முதல்வர் தான் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து பல்கலைக்கழங்களின் வேந்தராக இருந்தால் தான் அனைத்தும் இங்கு உண்மையாக எல்லாம் நடைபெறும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.
இதைத்தொடர்ந்து தீர்மானத்துக்கு எதிர்ப்பு தொடர்ந்து, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இருந்து பாஜக வெளி நடப்பு செய்தது. மசோதாக்கள் மீதான விவாதத்தில் ஆளுநருக்கு எதிரான எம்.எல்.ஏ.க்களின் பேச்சை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தது.
முன்னதாக, ஆளுநர் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார் என்று தளி ராமச்சந்திரன் பேசியதற்கு பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஆட்சேபம் தெரிவித்தார். எம்.எல்.ஏவின் பேச்சில் உள்நோக்கம் இருப்பதாக குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் சிறுபிள்ளை என்பது நல்ல வார்த்தைதான் என்றார்.
இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன்.. அந்த வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் குழந்தைத் தனமாக பேசி வருகிறார் என்றும் கூறி தனது பேச்சை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏநயினார் நாகேந்திரன், உயர்கல்வியில் தமிழகத்துக்குத்தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து தரக்குறைவாக பேசுகின்றனர். இது வருந்தத்தக்கது. வேதனைக்குரியது.
திமுக தன்னுடைய செல்வாக்கை இழந்துகொண்டே செல்கிறது. சிறப்புக் கூட்டத்துக்கான அவசியம் இருப்பதாகத் தெரிய வில்லை. தமிழகத்தில் மக்கள் பிரச்னை ஏராளம் உள்ளது. மின்கட்டண உயர்வு அதிகரித்துள்ளது. வீட்டு வரி உயர்வு 100 மடங்கு கூடியுள்ளது. இவை அனைத்தும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். பட்டியலின மக்களுக்கு தாக்குதலும் அச்சுறுத்தலும் அதிகரிக்கிறது.
இதை மறைப்பதற்காக ஆளுநர் விவகாரத்தை கையில் எடுக்கிறது திமுக. வேந்தர் பதவியில் முதல்வர்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். இவை அவசியம்தானா? நாட்டில் வேறு பிரச்னைகள் இல்லையா? மக்கள் பிரச்னையை மையப்படுத்தாமல், ஆளுநரின் நடவடிக்கையை மையப்படுத்துகின்றனர் எனக் குறிப்பிட்டார்.