சென்னை
இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்துள்ளார்.
கடந்த 2023 ஆம் வருடம் ஜூன் 15 ஆம் தேதி அன்று சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.240.54 கோடி செலவில் உலக தரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில், இருதயவியல் துறை, இருதய அறுவை சிகிச்சைத் துறை, நரம்பியல் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் மருத்துவத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, குடல் இரைப்பை மருத்துவத் துறை, குடல் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை. சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக மருத்துவத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, மூளை இரத்தநாள கதிரியல் துறை ஆகிய உயர்சிறப்பு மருத்துவச் சிகிச்சைக்கான வசதிகளை கொண்டுள்ளது.
இன்று கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து விசாரித்ததோடு, அந்த நோயாளிகளின் உறவினர்களுடன் முதல்வர் உரையாடினார்.
அத்துடன் நரம்பியல் சிகிச்சை பிரிவிற்கும் சென்று அங்கு உள்ள நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சைகளையும் பார்வையிட்டார். அங்கு செயல்பட்டு வரும் இதய கேத்லாப் ஆய்வகத்திற்கு சென்று ஆய்வு செய்து, நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்கள் குறித்தும் மருத்துவ வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படும் உணவுக் கூடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். பின்னர், பணியாளர்களின் வருகைப் பதிவேடு, மருந்துகள் இருப்பு பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வந்து செல்லும் இந்த மருத்துவமனைக்கு, கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களை நியமிக்குமாறும், டயாலிசிஸ் சிகிச்சை பிரிவிற்கு கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்களை வழங்குமாறும் ஆணையிட்டுள்ளார்.