சென்னை
இன்று ஆளுநரின் செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை உடனடியாக நீக்குவதாக நேற்று இரவு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இந்த உத்தரவுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ரவி பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜி நீக்கம் மற்றும் அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரின் முடிவு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முதல் அமைச்சர் ஆலோசனை செய்கிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்ட வல்லுநர்கள்,மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசிக்கிறார்.