சென்னை:
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையைத் திரும்பப் பெறக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டின் விவசாயிகளையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் “கண்ணை இமை காப்பது போல” தமிழ்நாடு அரசு காக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாகவே காவிரி டெல்டா மாவட்டங்களில் பல கச்சா எண்ணெய் – எரிவாயு கிணறுகளால் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் பல மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதை எதிர்த்து மக்கள் போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் கடந்த ஆண்டு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அப்போது முதல்வராக இருந்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடதெரு குதியில் கச்சா எண்ணெய், ஷேல் கேஸ் எடுக்கும் ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நெடுவாசலுக்கு அருகிலுள்ள “வடத்தெரு” பகுதியில் கச்சா எண்ணெய், ஷேல் கேஸ் எடுக்கும் ஏல அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்னரும் இதுபோன்ற ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையைத் திரும்பப் பெறக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 10.6.2021 அன்று ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஏலம் விடுவதாக ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் காவிரிப் படுகை பகுதியில் வடதெரு என்ற பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் உற்பத்திக்காக ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தால், வளமான காவிரிப் படுகை பகுதியிலுள்ள விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், இந்தப் படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது தமிழ்நாடு அரசின் உறுதியான கொள்கையாகும்.

இக்காரணங்களை எடுத்துக்காட்டி, மேற்குறிப்பிட்ட ஏலத்திலிருந்து வடதெரு பகுதியை நீக்க வேண்டுமென்றும், எதிர்காலங்களில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்றும், இந்தியப் பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன்.

மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்றும், தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களின் நலனையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் “கண்ணை இமை காப்பது போல” எங்கள் அரசு காக்கும் என்றும் உறுதிப்படக் கூற விரும்புகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.