சென்னை: உலக பொருளாதார மன்றம் நடத்தும் மாநாட்டில் கலந்துகொள்வதின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் உலகளாவிய புகழை அடைய போவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் உயர்கல்விச் சிறப்பு குறித்த செவ்வரங்கம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. இதில், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (National Institutional Ranking Framework – NIRF) விருதுபெற்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஆளுநர் விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள், தனியார் கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தரவரிசையில் சிறப்பான இடங்களை பிடித்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததுடன், இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.,க்கு பாராட்டு தெரிவித்தார். இந்த தர வரிசையில் முதலமைச்சர் படித்த மாநிலக் கல்லூரியும் இடம்பிடித்துள்ளதாக கூறியவர், இதுவே தமிழ்நாட்டின் உயர்கல்வி சிறப்புக்கு சான்று என புகழாரம் சூட்டினார். தற்போது வெளியாகி உள்ள தரவரிசையில் 12-வது இடத்தில் வந்துள்ளது மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி. அடுத்தடுத்த ஆண்டுகளில், முதல் 10 இடங்களுக்குள் வரும் என்று நம்பக்கை தெரிவித்தார்.
மேலும், 2023ம் ஆண்டு ஜனவரியில் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக தன்னையும் கலந்துகொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிததவர். அந்த கருத்தரங்கில் கலந்துகொள்வதன் மூலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், நல்லாட்சியின் புகழ், வரும் ஜனவரியில் உலகளாவிய புகழை அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவிலேயே அதிகளவில் 70 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதன் மூலம் 10,000 மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் அரசாக இருந்தாலும் சரி, அவர்களை பாராட்டும் ஆளுநராக இருந்தாலும் சரி அனைத்திலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.