சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொண்டது, தொழில் முதலீடுக்காக சென்றாரா? சொந்த சிகிச்சைக்காக சென்றாரா? என முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் புதிய தொழில் முதலீட்டை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது ஏராளமான தொழில்அதிபர்களை சந்தித்து, அவர்களுடன் தமிழக தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்தார். முதல்வரின் பயணம் முடிவடைந்து மாதங்களை கடந்த நிலையில், தற்போது முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சம் செய்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீடுக்காக அமெரிக்கா செல்லாமல் அவரது உடல் சிகிச்சைக்காக சென்றதாக மக்கள் கூறுகிறார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளரு மான எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு பயணியர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் நடைப்பெற்ற வான்வெளி சாகச நிகழ்விற்கு தமிழகஅரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததே விலை மதிக்க முடியாத உயிரிழப்பிற்கு காரணம் என்றும், விமான சாகச நிகழ்விற்கு அழைப்பு விடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்பதால் இதற்கு அவர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார்.
இந்தியாவிலேயே மிகச்சிறந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு தண்ணீர் அதிமுக அரசு கொண்டு வந்தது. அந்த தண்ணீரை சிப்காட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அதற்காக நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடரும் எனவும் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்திலேயே மாணவ செல்வங்கள் போதைக்கு அடிமையாக்கி வருவதை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் எனவும், ஈரோட்டில் ஒரு தனியார் கல்லூரி தாளாளர் சாலையில் சென்ற போது மாணவர்கள் கூட்டமாக இருப்பதை கண்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்து போதை பொருட்கள் விற்பனை செய்ததை தடுத்தார். தொடர்ந்து அந்த தாளாளருக்கு திமுகவினர் மிரட்டல் விடுத்ததாகவும் அதற்கும் கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் போதை பொருட்கள் அமோகமாக விற்பனை நடைப்பெற்று வருகிறது என குற்றம் சாட்டினார்.
அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஒரு ஆண்டாக சம்பளம் தராத திமுக அரசை வலியுறுத்துவோம்.
சென்னை மாநகரகத்தில் அதிமுக அரசு 1240 கிலோமீட்டர் தூரத்திற்கு மழை நீர்வடிகால் அமைக்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த திட்டத்தை முழுமையாக தொடர்ந்து நிறைவேற்ற வில்லை,
மெட்ரோ திட்டம் கட்டம் 2 சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் 63 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அதிமுக ஆட்சி கொண்டு வந்தது, ஆனால் திமுக கிடப்பில் போட்டது. மத்திய அரசிடம் அதிமுக முறையாக அணுகி நல்ல திட்டங்களை கொண்டு வந்தது ஆனால் திமுக அரசு என்ன புதிய திட்டம் கொண்டு வந்தது. பல லட்சம் கோடி கடன் வாங்கி என்ன புதிய திட்டம் கொண்டு வந்தது என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களை அமெரிக்கா அழைத்து சென்று 17 நாட்கள் தங்கி 7 ஆயிரம் கோடியில் தொழில் முதலீடு ஈர்த்ததாக கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீட்டிற்கு செல்லாமல் ஸ்டாலின் உடற்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதாக பொதுமக்கள் கூறுகின்றனர் எனவும் கூறினார்.