ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து காட்பாடி வரை ரயிலில் சென்ற மு.க. ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.

ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அதிகரிப்பதற்கு ஆதரவாக பொது ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம் என்றும், முன்மொழியப்பட்ட ரயில் கட்டண உயர்வைத் தொடர வேண்டாம் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (ஜூன் 25, 2025) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரை வலியுறுத்தினார்.
மேலும், ரயில் நிலையத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடியதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “முன்மொழியப்பட்ட கட்டண உயர்வு மற்றும் பொது வகுப்பு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைவதால் அவர்களிடையே வழக்கமான மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் இல்லை” என்று அவர் கூறினார்.
“ரயில்வே என்பது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான போக்குவரத்து சாதனம் மட்டுமல்ல. அது அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கட்டணங்களை அதிகரிக்கவோ அல்லது பொது ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கவோ வேண்டாம் என்று மோடி மற்றும் வைஷ்ணவ் ஆகியோரை நான் கேட்டுக்கொள்கிறேன்.
பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் எல்பிஜி விலைகள் காரணமாக நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் ஏற்கனவே நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சுமையை அதிகரிக்காதீர்கள். இந்திய ரயில்வே வெறும் சேவை மட்டுமல்ல – அது குடும்பம்!” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.