சென்னை
மரம் விழுந்து காயம்பட்ட இளைஞரைக் காப்பாற்றிய அண்ணாநகர் காவல்துறை பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கனமழை மற்றும் கடும் காற்றால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் மரம் விழுந்து கீழே விழுந்துள்ளார். மது போதையால் அவர் அசையாமல் இருந்ததால் அவர் உயிரிழந்தார் என எண்ணி காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர் உயிருடன் இருப்பதை அறிந்து தாமே தனது தோளில் சுமந்து சென்று ஒரு ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். சரியான நேரத்தில் வந்து இளைஞரை முதுகில் சுமந்து உயிரைக் காத்த ராஜேஸ்வரிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது டிவிட்டரில்,
“தொடர் மழை – அளவுக்கதிகமான நீர்வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது துயர் துடைக்கப் பணியாற்றும் காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன்.
தன்னலம் பாராத உங்களது சேவையாலும் தியாகத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைக்கப்படுகிறது. இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம்! மக்களைக் காப்போம்!
உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது! உங்கள் சேவை மகத்தானது! உங்கள் உள்ளத்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!”
எனப் பதிந்துள்ளார்.