சென்னை: கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்ட முயற்சித்து வரும் வேளையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு, புதுச்சேரி , கேரளா அனுமதி இல்லாமல் காவிரியில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாதுஎன உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே பிரதமரிடம் முதல்வலி வலியுறுத்தி உள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும்,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது அணைகட்டும் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் வலியுறுத்தலால், பாஜக அரசு அணை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது ஆணை குவித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு தமிழகஅரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘காவிரி கரையில் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடகா மாநிலம் அளித்த திட்டத்துக்கு மத்திய நீர்வளத்துறை ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கடந்த ஆண்டு ஜூன் 17-ம் நான் உங்களிடம் வலியுறுத்தியிருந்தேன்.
அதேபோல, கர்நாடகா அரசு மேகதாது அணைத் திட்டத்துக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு எதிராக இந்த ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படாது என்று எங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய கருத்துகள் இருக்கும்நிலையில், வரும் ஜூன் 22-ம் தேதி நடைபெறவுள்ள 16-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணைத் திட்டத்தின் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த முடிவு தமிழ்நாட்டின் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எங்களுடைய மாநிலம், குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்துக்கும் காவிரியைச் சார்ந்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.