சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 21, 22-ல் களஆய்வு மேற்கொள்ள இருப்பதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்து உள்ளார். அப்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்  அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைக்கிறார்.

அரசுத் திட்டப் பணிகள் தொடர்பாக அந்தந்த மாவட்டங்களுக்கே நேரில்  சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்து வருகிறார். அப்போது அரசின் நலத்திட்டங்களை மக்களை சென்றடைகிறதா என்பதை அறிந்து கொள்வதுடன்,  பொது மக்களின் குறைகளை கேட்டறிவதுடன், முடிவுபெற்ற மக்கள் நலப்பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களையும் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து வருகிறார். அதன்படி, ஏற்கனவே கோவை உள்பட சில மாவட்டங்களில் கள ஆய்வுபணிகளை மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அடுத்ததாகவு சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு செய்யப்போவதாக தெரிவித்து உள்ளார்.

அதன்படி,   ஜன.21,22-ல் சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். ஜன.21-ல் காரைக்குடி அழகப்பா பல்கலையில் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். காரைக்குடியில் அன்று இரவு தங்கும் முதல்வர், ஜனவரி 22ம் தேதி காலை சிவகங்கை வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் துறை ரீதியான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.