சென்னை

த்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளர்.

 

நேற்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவரும் 100 வயதை தாண்டி று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவருமான பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.  இந்த ஆண்டு திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,

“ திமுகவின் முன்னோடியும் – கடந்த 17-ஆம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான பாப்பம்மாள் 108 அகவையில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன். பேரறிஞர் அண்ணா மீதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதும் பற்றுக் கொண்டு, திமுக தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர். 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டக்களங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் அவர்.

1959-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பம்மாள் 1964-இல் காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், பின்னர் தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார். 1970-ஆம் ஆண்டு தொடங்கி 45 ஆண்டுகாலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக உழவர் விவாதக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார். 1965-ஆம் ஆண்டிலேயே மாதர் சங்கத் தலைவராகச் செயல்பட்டு, கிராமப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டார். தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர் பாப்பம்மாள்

பாப்பம்மாளின் வாழ்வையும் தொண்டையும் போற்றும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, “உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!” என்று அவரை வாழ்த்தினேன். திமுக முப்பெரும் விழாவில், “ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளம்” என அவரை மனம் நெகிழப் பாராட்டி மகிழ்ந்திருந்தேன். ஆனால் இன்று சொல்லொணாத் துயரத்தில் நம்மையெல்லாம் ஆழ்த்தி விட்டு அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

அண்ணா அறிவாலயத்திலும், எனது இல்லத்திலும் பாப்பம்மாளை சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும். என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன்.பாப்பம்மாளை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், திமுக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.