சென்னை

முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகம் கல்வி வளர்ச்சியில் ஒளி விளக்காக திகழ்வதாக கூறி உள்ளார்.

நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர்ர் மு.க.ஸ்டாலின்,

”உயர்கல்வி தரவரிசையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் கல்வி வளர்ச்சியில் தமிழகம் ஒளிவிளக்காக திகழ்கிறது. 31 உயர்கல்வி நிறுவனங்கள், சுமார் 500 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. தரமான கல்வியால் நாட்டை நாம் வழி நடத்திக் கொண்டிருக்கிறோம். உயர்கல்வியில் தேசிய சராசரியை விட தமிழகம் அதிக அளவை எட்டி இருக்கிறது. மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 22 இடங்களை தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் பிடித்துள்ளன

இளைஞர்களின் எதிர்காலத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தவே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. காலத்திற்கு ஏற்ப புதிய கற்றல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும். உலகளவிய புதிய கற்றல் முறைகளை, அறிவியல் தொழில்நுட்பங்களை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யாவிட்டால் மாணவர்கள் பின்தங்கி விடுவார்கள். மாற்றங்களின் பயன்கள் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.க பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கான தொடக்கம்தான் இந்தக் கூட்டம். உயர்கல்வித் துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏ.ஐ உள்ளிட்டவற்றை சேர்த்து பாடத்திட்டங்களை வகுக்க வேண்டும்.

2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளைஞர்களின் வாழ்க்கையை உருவாக்கும் பொறுப்பு பல்கலைக்கழகங்களிடம் உள்ளது. தடையற்ற, தரமான கல்வியை பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். மாணவர்களின் முழு வளர்ச்சிக்கு முன்னுரிமை தர வேண்டும்.

ஆராய்ச்சி, புதுமைக்கான மையமாக தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்விக்கான பொற்காலமாக திராவிட மாடல் ஆட்சி இருக்க வேண்டும். உயர்கல்வியை உலக தரத்திற்கு உயர்த்த தலைசிறந்த கல்வியாளர்களின் ஆலோசனைகள் கேட்கப்படும்.”

எனக் கூறினார்.