சென்னை
தமிழக காவல்துறையினர் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு இட்டுள்ளார்.
இன்று தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், கடந்த 13-9-2021 அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், ’காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிடத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (3-11- 2021) உத்தரவிட்டுள்ளார்.அதற்கான அரசாணை இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது .
காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும், உற்சாகத்தோடும் தங்கள் பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.