சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

வரும் 2026-ல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அவ்வரிசையில் தமிழக ஆளுங்கட்சியான திமுக, தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதில் ஒருபகுதியாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை ஜூலை 1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கடந்த 3-ம் தேதி முதல் வீடுவீடாகச் சென்று புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரிலான திமுக உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை யில் வீடு, வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொண்டார்.
மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் முதல் கட்சி உறுப்பினர்கள் வரை அனைவரும் அவரவர் வாக்குச்சாவடிகளில் இருக்கும் வீடுகளுக்குச் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர்.
நேற்று‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகப் பேசும் போது அவர்களிடம் உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். திமுகவின் இந்த பிரச்சார இயக்கமானது 45 நாட்கள் நடைபெற உள்ளது.