சென்னை:
சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள், 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மருத்துவ வல்லுநர்கள் குழு மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, கொரோனா நோய்க் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்தும், ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், இரண்டு டோஸ் தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டுமென்று முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, முகக்கவசங்களை வழங்கி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 504 ஆக்ஸிஜன் படுக்கைகள், 400 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 904 படுக்கை வசதியுடன் கோவிட் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வர்த்தக மையத்திற்கு நேரடியாக சென்று ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் கோவிட் சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கோவிட் சிகிச்சை மையத்தில் 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்ஸிஜன் சேமிப்பு கலன்கள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.