சென்னை
இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரூ. 150.05 கோடி மதிப்புள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னைப் பெருநகரப் பகுதியின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு விரிவான திட்டமிடல் தேவை என்பதை உணர்ந்து 1972-ல் மெட்ராஸ் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் தற்காலிக அமைப்பாக இருந்து, பின்னர் 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-ன் கீழ் சட்டப்பூர்வ குழுமமாக மாற்றப்பட்டது. சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், நிலவகைப்பாடுகளில் உபயோக மாற்றங்களை முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் செயல்படுத்தி வருகிறது.
அவ்வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கத்தில் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையம், அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் 13.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி, கொண்டித்தோப்பில் 11.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம், கோயம்பேடு சாலை சந்திப்பில் 10.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள இயற்கை வனப்புடன் புதிய பூங்கா, மயிலாப்பூர், முண்டகக் கண்ணியம்மன் கோயில் அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் 8.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய உள்விளையாட்டு அரங்கம் மற்றும் காசிமேடு கடற்கரை பகுதியில் 8.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடற்கரை பகுதியை மேம்படுத்தும் பணி என மொத்தம் 150 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.