அரியலூர்: தமிழ்நாட்டைச் சேர்ந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இந்திய ஆக்கி வீரர் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டுக்கு சென்று நேரில் வழங்கினார்.

ஆசிய கோப்பையில் விளையாடிய இந்திய அணியில் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் இடம் பெற்றிருந்தார். இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் விளையாடிய இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இதனையடுத்து ஆக்கி வீரர் கார்த்திக்கிற்கு 10 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலையை கடந்த 24.11.2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் அரியலூர், ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த கார்த்திக் குடும்பத்தினர், தங்களது சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தங்களின் மகன் விளையாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்கு உதவிகள் வேண்டி முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், கார்த்திக் வீட்டிற்கு நேரில் சென்று, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அரியலூர் மாவட்டம், குரும்பஞ்சாவடி திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை, வழங்கினார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு, சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன் மற்றும் ஆர்.ராசா எம்.பி.உள்ளிட்டோர் உடன் இருந்ததாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.