சென்னை:
நாட்டில் பாஜக ஆட்சி செய்யாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவசரமாக ஒரு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் சாராம்சங்களையும் இணைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் தொடர்பாக, ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் அவர்களின் மாநில சட்டப்பேரவைகள் தீர்மானம் நிறைவேற்ற கோரி அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சரின் அந்த கடிதத்தில், இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதையும், நமது நாட்டில் கூட்டாட்சி தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதையும் காண்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவைகள் இப்போது மதிக்கப்படுவது அல்லது பின்பற்றப்படுவதோ இல்லை என்றும், அதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர்கள் உரிய காலத்திற்குள் ஒப்புதல் தர மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் அறிவுரை தர வலியுறுத்தி ஆளுநருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவைகள் மு க ஸ்டாலின் தனிநபர் தீர்மானத்தை நிறைவேற்றி இருந்த நிலையில், தற்போது இதேபோன்று தீர்மானம் நிறைவேற்றக்கோரி பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களுக்கு மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.