பெருந்துறை

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் தமிழக அரசின் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 2 நாட்கள் நடக்கிறது.இதன் தொடக்க விழா இன்று (புதன்கிழமை) மதியம் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டு விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

இந்த வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முன்னிட்டு விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.  விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் பந்தலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அரசுத்துறை அரங்குகள் அமைக்கும் பந்தல், தனியார் அரங்குகள் அமைக்கும் பந்தல், வேளாண் எந்திர தளவாடங்களுக்கான அரங்கம் மற்றும் உணவுக்கூடம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மலர் கண்காட்சி அரங்கு, கரும்பு அரங்கு ஆகியவை அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இங்லி மொத்தம் 200 கண்காட்சி அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  குறைந்த பட்சம் 50 ஆயிரம் விவசாயிகள் கண்காட்சியை பார்வையிட உள்ளனர். மேலும் கண்காட்சிக்கு வரும் விவசாயிகளுக்கு அங்கேயே உணவு வழங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வேளாண் கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அவர் அங்கிருந்து கார் மூலம் விஜயமங்கலம் வருகை தருகிறார். முதல்வர்ர் வருகையை முன்னிட்டு விஜயமங்கலம் முதல் நெரிஞ்சிபேட்டை வரை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.