சென்னை:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் படம், அனைத்து அமைச்சர்களின் அறையிலும் வைக்கப்பட்டுள்ளது, பலவித யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ஜெயலலிதாதான் எல்லாம் என்ற நிலை, இருந்தது. அவரது  படங்களே எங்கும் நிறைந்திருக்கும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும்கூட, அவரது படங்களை மேடையில் வைத்து நிகழ்ச்சிகள் நடந்தது உண்டு. இந்த சூழலில் சசிகலாவும் இப்படி முன்னிறுத்தப்பட்டாலும், ஜெயலலிதாவின் படங்களுக்கு முக்கியத்துவம் இருந்தது.

இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை, இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனுக்கு சிறை என்று காட்சிகள் மாறின.   “இனி சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சி பணிகளில் இருந்து ஒதிக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் அறிவித்தனர்.

தினகரனும், தான் ஒதுங்கிவிடுவதாக அறிவித்தார். பிறகு சிறையில் அடைக்கப்பட்ட அவர், சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்த உடனேயே, தான் கட்சிப்பணிகளில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை நேற்று சந்தித்தார்.

இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், நேற்று சுமார் 18 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஏற்கெனவே சொன்னது போல தினகரனை விலக்கி வைக்கிறோம். அவர் கட்சிப் பணிகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்றார்.

இந்த நிலையில் இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் அதிரடி நிகழ்வு ஒன்று நடந்தது. முன்பு ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோதும், தற்போது எடப்பாடி முதல்வராக பதவியேற்ற பிறகும்கூட, அமைச்சர்கள் அறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின படம் மட்டுமே இருந்தது.

இந்த நிலையில் இன்று அனைத்து அமைச்சர்கள் அறையிலும் ஜெயலலிதாவின் படத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படமும் வைக்கப்பட்டுள்ளது.

“பட அரசியலுக்கு” முக்கியத்துவம் உள்ள தமிழகத்தில் இந்த மாற்றம் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

தினகரன் உட்பட மன்னார்குடி குடும்பத்தினரின் ஆதிக்கத்தை அமைச்சர்கள் விரும்பவில்லை என்பதை இது வெளிப்படுத்துவதாக உள்ளது.