சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நாளை சந்தித்து பேசுகிறார்.
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆனால் அதற்குள் அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற அக்கட்சி செயற்குழு கூட்டத்திலும் இது குறித்து கடுமையான விவாதங்கள் எழுந்ததாக கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து வரும் 7ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ்சும் தனித்தனியாக ஆதரவாளர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்தித்து பேசுகிறார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை மாலை 5 மணிக்கு சந்திப்பு நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.